கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவர் சமூக வலைதளங்களில் இளம்பெண்களுடன் பழகி அவர்களைக் காதலிப்பதுபோல் நடித்து பாலியல் வன்புணர்வு செய்ததுடன் ஆபாச காணொலிகள் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதுசெய்யப்பட்டார்.
இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்திவந்த நிலையில், காசி குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காசி மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி காசியை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திவந்தது. காசியின் 5 நாள் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், போலீஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி காசியின் லேப்டாப்பில் அழிக்கப்பட்ட காணொலிகள், புகைப்படங்களை எடுப்பதற்காக எந்தெந்த ஐடியில் இருந்து ஆபாச படங்கள் அனுப்பிவைக்கப்பட்டன என்பதைக் கண்டறியும் வகையிலும் சைபர் கிரைம் சிறப்புக் குழு ஆய்வு செய்தது.
இந்த ஆய்வில் ஆயிரத்திற்கும் அதிகமான காணொலிகள், புகைப்படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல காணொலிகள் இளம் பெண்களுக்குத் தெரியாமல் ரகசியமாக எடுக்கப்பட்டு இருந்தன. காசியின் கூட்டாளிகள் திரைமறைவில் இருந்து காசிக்கு உதவி உள்ளார்கள். அவர்களைக் கைது செய்யும் வகையில் சில தகவல்களை காசியிடமிருந்து காவல் துறையினர் சேகரித்துள்ளனர்.
எனவே இந்த வழக்கில் காசியின் மேலும் இரு கூட்டாளிகள் சிக்குவார்கள் எனத் தெரிகிறது. காணொலியில் உள்ள சில இளம்பெண்களின் விவரங்களைச் சேகரித்துள்ள காவல் துறையினர் அவர்களைத் தொடர்புகொண்டு புகார் பெற முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
காசி மீது இதுவரை 7 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் ஒரு வழக்கு கந்துவட்டிக் வழக்காகும், மீதி உள்ள வழக்குகள் பாலியல் வன்புணர்வு, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் பதிவான வழக்குகள்.
காசி மீது புகார் அளிப்பவர்களின் விவரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும் என சிபிசிஐடியினர் கூறியுள்ளனர். மேலும் 150-க்கும் மேற்பட்ட பெண்களைச் சீரழித்த காசியில் வழக்கில் 20 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தெரிவித்துள்ளார்.
காசியின் 5 நாள் போலீஸ் காவல் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு சிபிசிஐடியினர் ஆஜர்படுத்தினர். இதனைத்தொடர்ந்து காசியை மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.