கன்னியாகுமரி: கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது. இந்த சிலை கடல் காற்று, புயல், மழை, வெயில் போன்றவைகளை தாங்கி நிற்பதால் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவைப் பூசப்படுவது வழக்கம்.
தற்போது, 5ஆவது முறையாக ரசாயன கலவை பூசும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் இப்பணி முதற்கட்டமாக இரும்பு பைப்புகள் கொண்டு சிலையைச் சுற்றி சாரங்கள் அமைக்கப்பட்டு, பின்னர் தண்ணீர் கொண்டு, சிலை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, சிலையின் இணைப்புகளில் ஏற்பட்டுள்ள வெடிப்புகளை சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் கொண்ட கலவையால் பூசப்பட்டது.
கடந்த மாதம் சிலையில் படிந்துள்ள உப்பினை அகற்றும் விதமாக சிலை மீது காகிதக் கூழ் ஒட்டும் பணிகள் தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் மத்திய மின் வேதியல் ஆய்வகத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சரஸ்வதி, தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆணையர் சிவானந்தம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் பாரதி தேவி ஆகியோர் அடங்கிய நிபுணர்கள் குழுவினர் இன்று கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை ஆய்வு செய்தனர்.
சிலையில் உள்ள உப்புக்கள் அனைத்தும் நீங்கிவிட்டதாகவும், திங்கள்கிழமை முதல் ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாக்கர் எனும் ரசாயனம் வள்ளுவர் சிலை முழுவதும் பூசப்பட உள்ளதாகவும், 15 நாட்களுக்குள் திருவள்ளுவர் சிலையில் ரசாயனம் பூச்சும் பணிகள் அனைத்தும் முழுவதுமாக முடிவடைந்து சுற்றுலாப் பயணிகள் சிலையைப் பார்க்க அனுமதிக்கப்பட உள்ளதாகவும் நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வீடியோ: கன்னியாகுமரியில் சூரிய உதயம்.. அதிகாலை முதலே குவியும் கூட்டம்..