கோடை விடுமுறை நிறைவடைந்ததை அடுத்து சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாகக் காணப்படுகிறது. தற்போது பெரும்பாலும் வட மாநில சுற்றுலாப் பயணிகளே வருகின்றனர். கடலோர பகுதியில் பாதுகாப்புப் பணிக்காக கடலோர பாதுகாப்பு குழுமத்தினர், சுற்றுலா காவல் துறையினர், உள்ளூர் காவல் துறையினர் உள்ளனர். ஆனால், இவர்கள் யாரையும் தற்போது கடற்கரைப் பகுதிகளில் காணமுடிவதில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முக்கடல் சங்கமத்தில் உள்ள ஆபத்தான பாறைகளுக்கு எந்தத் தடையுமின்றி அலையை அருகில் நின்று ரசிப்பதற்காகவும், அலையோடு செல்ஃபி எடுப்பதற்காகவும் செல்கின்றனர். இதனைத் தடுக்க அங்கு காவல் துறையினர் யாரும் இருப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், கடல் நீர்மட்டம் குறைவு, அதிகரிப்பின் காரணமாக கடல் நிலையற்ற நிலையில் உள்ளதால், உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய மரணப்பாறைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்தும் வகையில் போதிய ஏற்பாடுகளை செய்து காவல் துறையினரையும் நியமிக்க வேண்டுமென சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.