கன்னியாகுமரி: நாகர்கோவில், கன்னியாகுமரி, குலசேகரம், மார்த்தாண்டம், களியக்காவிளை பகுதிகளில் அரசு விரைவு போக்குவரத்து கழகம்(SETC) மூலமாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் சென்னை, பெங்களூர், திருப்பதி, கோவை, திருச்சி, சேலம், தஞ்சை, கொடைக்கானல், ஊட்டி, ஓசூர் போன்ற பல்வேறு வழி தடத்தில் இயக்கப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் விரைவு போக்குவரத்து கழகம் என்ற பெயரில் விரைவு பஸ்கள் செயல்பட்டு வந்த காலத்தில் இருந்து அனைத்து தரப்பு மக்களும் இந்த பேருந்துகளை நெடுந்தூர பயணத்திற்கு பயன்படுத்தி வந்தனர். பின்னர் காலப்போக்கில் ஆம்னி பஸ் போக்குவரத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது.
இரண்டு ஆம்னி பேருந்துகளுடன் செயல்பட்ட தனியார் பேருந்துகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 200க்கும் மேற்பட்ட பேருந்துகளாக மாறி விட்டன. இது போன்ற பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் சாதாரண நாட்களில் ஆயிரம் முதல் அதிகபட்சமாக பண்டிகை காலங்களில் ஐந்தாயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் கால நேரத்தையும், சொகுசான பயணத்தையும் கருத்தில் கொண்டு இது போன்ற பேருந்துகளில் பயணம் செய்து குறிப்பிட்ட காலத்திற்குள் தொலைதூர ஊர்களை சென்றடைந்து வருகின்றனர்.
ஆனால் அந்த அளவிற்கு கட்டணத்தை செலுத்த முடியாத ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இப்போதும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பிடும்படியாக சொல்ல வேண்டுமானால், ஆம்னி பேருந்தில் ரூ.2,800 அல்லது ரூ.3,500 செலுத்தி சென்னை செல்பவர்கள் ஒருபுறம் இருக்க, ரூ. 710 மட்டுமே செலுத்தி கால நேரத்தை பற்றி கவலைப்படாமல் வேறு வழியின்றி சென்னை செல்பவர்கள் தான் இந்த ஏழை மக்கள்.
இந்த வகையில் விரைவு ரயில்களில் பயணிக்க பெரும்பாலானோர் ஆர்வமாக இருந்த போதிலும், தினமும் நாகர்கோவிலில் இருந்து நான்கு முதல் ஐந்து ரயில்கள் சென்னை சென்ற போதிலும் பயணிகளுக்கு உரிய நேரத்தில் பயண சீட்டு கிடைக்காத நிலை தான் இன்னமும் நீடித்து வருகிறது. இவர்கள் அனைவருக்கும் கை கொடுப்பது அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் மட்டுமே.
இந்த நிலையில் தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், எவ்வித அறிவிப்பும் இன்றி ஒரு கட்டண உயர்வை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதாவது சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு அல்லது நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட கிழமைகளில் பயணம் செய்தால் ரூ. 100 முதல் ரூ. 150 வரை கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும்.
சாதாரண விரைவு பேருந்துகளில் சென்னைக்கு ரூ. 710 கட்டணம் வசூலிக்கப்பட்டால், இந்த மூன்று தினங்களிலும் ரூ.810 கொடுக்க வேண்டும். குளிர் சாதன வசதி கொண்ட பேருந்துகளில் ரூ. 815 செலுத்தி வந்த பயணிகள் வெள்ளி, சனி ஞாயிற்று கிழமைகளில் ரூ.960 செலுத்த வேண்டும். ஏசி படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் 1,300 ரூபாயில் இருந்து 1,400 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து நாகர்கோவிலைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜான் விக்டர் தாஸ் கூறுகையில், "சென்னையில் இருந்து தான் பயணம் செய்த போது தன்னிடம் கூடுதலாக 150 ரூபாய் வசூல் செய்யப்பட்டதாகவும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் ஏழைகளின் ரதங்கள் என்று அழைக்கப்படுகின்றது. ஆம்னி பேருந்துகளில் ஏழைகள் எட்டி கூட பார்க்க முடியாது என்ற அளவிற்கு கட்டண உயர்வு இருப்பதால் தான் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளை பொது மக்கள் தங்கள் பயணத்திற்கு தேர்வு செய்தனர்.
இப்படிப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி பயணம் செய்த போது கூடுதலாக 150 ரூபாய் நடத்துநர் வசூலித்தார். எதற்காக இந்த கூடுதல் கட்டணம் என்று விசாரித்த போது வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் கூடுதலாக ரூ.100 முதல் ரூ.150 வரை வாங்கச் சொல்லி மேல் அதிகாரிகள் தங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவ்வாறு பொது மக்கள் தலையில் மறைமுக கட்டண உயர்வை அறிவித்து உள்ள தமிழக அரசு தமிழகத்தின் அனைத்து தடங்களிலும் இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகங்களில் வரம்பை மீறி கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இது சாதாரண மற்றும் நடுத்தர மக்களை நசுக்கும் செயல். எனவே அறிவிக்கப்படாத கூறப்படும் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.
மேலும் இப்படிப்பட்ட வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் கட்டன உயர்வை அதிகரித்து உள்ளது பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வு செய்து வருவதைப் போன்று உள்ளது. அரசு பேருந்துக்கும், தனியார் பேருந்துக்கும் வித்தியாசம் இல்லாமல் ஆகிவிட்டது. ஆகவே ஏழை, எளிய மக்களை கருத்தில் கொண்டு கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: கண்டுகொள்ளப்படாத அம்மா உணவகங்கள்.. குறைக்கப்பட்ட உணவுப்பொருட்கள்.. மக்கள் ஆதரவு பெற்ற திட்டம் வீழ்ந்ததா?