கன்னியாகுமரி: மக்கள் வரிப்பணத்தில் ரூ.14 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட மெகா சுற்றுலாத் திட்டம் முற்றிலும் செயல்படாமல் முடங்கியதைக் கண்டித்து மீண்டும் செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் நோக்கில் மத்திய அரசின் சுற்றுலாத் துறை உதவியுடன் ரூ.14 கோடி செலவில் பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை அறிவித்தது. அதன் அடிப்படையில் 2009ஆம் ஆண்டு தொடங்கிய இந்தத் திட்டம் 2011 மார்ச் மாதத்தில் முழுமைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து காந்தி மண்டபம் முன்பு முக்கோண பூங்கா, கடற்கரையில் சுனாமி பூங்கா, சுகாதார வளாகம், பேட்டரி கார், உயர்கோபுர மின் விளக்குகள் உள்ளிட்டவற்றை அமைத்து சென்னை மெரினா கடற்கரைக்கு இணையாக கன்னியாகுமரி கடற்கரையை பயணிகள் ரசிக்கும் வண்ணம் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் இதற்கான பணிகள் அனைத்தும் நிறைவடைந்தும் இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தற்போது, கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிக்க தவறியதால் இவை அனைத்தும் சமூக விரோதிகளின் கூடாரங்களாக மாறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக கொண்டுவரப்பட்ட அலங்கார நடைபாதை, புல்தரை மின்விளக்குகள் ஆகியவற்றை பராமரிக்க தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.