பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா: ஒடுக்கு பூஜை கோலாகலம்! - Bhagavathi Amman Temple Midnight Oduku Pooja
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடை விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலும் ஒன்று. இங்கு பெண்கள் இருமுடி கட்டி வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள். இதனால் இந்த கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் மாசிக்கொடை விழா கடந்த 5-ஆ தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் சிறப்பு வழிபாடு, அம்மன் வெள்ளி பல்லக்கில் வீதி உலா வருதல், சமய மாநாடு, யானை மீது சந்தன குடம் பவனி, வில்லிசை, கலை நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒன்பதாவது நாள் திருவிழாவில் இரவு பெரிய சக்கர தீ வெட்டி ஊர்வலம் நடைபெற்றது.
இதையொட்டி தினமும் குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டனர். திருவிழாவில் நிறைவு விழா நேற்று நடந்தது. நேற்று அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோயிலில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. அடியந்திர பூஜையும், தங்கத் தேர் உலா வருதல், சாயரட்சை பூஜை, அத்தாழ பூஜை, அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஒடுக்கு பூஜை தொடங்கியது. இதற்காக மண்டைக்காடு தேவசம் மேல் நிலைப்பள்ளி அருகே உள்ள சாஸ்தான் கோயிலில் இருந்து 21 வகையான உணவு பதார்த்தங்கள் 9 மண்பானைகள் மற்றும் பெட்டிகளில் வைக்கப்பட்டு பூசாரிகள் கோயிலுக்கு பவனியாக கொண்டுவந்தனர். அத்துடன் 2 குடம் தேனும் எடுத்து வரப்பட்டது.
இவற்றை வாயில் சிவப்பு துணியை கட்டிய நிலையில் பூசாரிகள் தலையில் சுமந்து வந்தனர். உணவு பதார்த்தங்கள் வெள்ளை துணியால் ஒரே சீராக போர்த்தப்பட்டு ஒடுக்கு பவனி நடைபெற்றது. இந்த ஒடுக்கு பவனி கோயிலை ஒருமுறை வலம் வந்து அம்மன் முன்பு உணவு வகைகள் வைக்கப்பட்டு, பின்னர் நடை அடைக்கப்பட்டு உணவு வகைகள் அம்மனுக்கு படைக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து குருதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்பின்னர் நடை திறக்கப்பட்டு ஒடுக்கு பூஜையும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. தீபாராதனை நடந்து கொண்டிருக்கும் போதே கொடி மரத்தில் இருந்த கொடி இறக்கப்பட்டது. கொடை விழாவையொட்டி நேற்று மண்டைக்காடு கோயிலில் குமரி மாவட்டம் மட்டுமன்றி தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் கோரளாவில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்கியது, அது போல் கேரள அரசு போக்குவரத்துக் கழகமும் சிறப்பு பஸ்களை இயக்கியது. மண்டைக்காட்டில் நேற்று பக்தர்கள் அதிகமாக குவிந்ததால் பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டனர். கடற்கரையில் பக்தர்கள் கால் நனைக்கும் பகுதியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யாகுமார் தலைமையில் நீச்சல் பயிற்சி பெற்ற சிறப்பு தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இதையும் படிங்க: புக்கர் பரிசு பட்டியலில் 'பூக்குழி' தமிழுக்கு கிடைத்த பெருமை!