கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்ன முட்டம், தேங்காய் பட்டினம் ஆகிய இடங்களில் தமிழக அரசின் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இதில் தேங்காய் பட்டினத்தில் கடந்த ஆட்சியில் கட்டி முடித்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட மீன்பிடி துறைமுகத்தின் நுழைவாயில் கட்டமைப்பு மோசமாக உள்ளது.
இதன் காரணமாக மீனவர்கள் மீன்பிடித்து விட்டு துறைமுகத்திற்குள் நுழையும்போது விசைப்படகுகளை கடல் அலைகள் தூக்கி வீசுவதும்,மணலில் விசைப்படகு சிக்கி கவிழ்வதும் போன்ற அசாம்பாவித சம்பவங்கள் பல முறை ஏற்பட்டுள்ளது. இவ்விபத்துகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிக்கி பலியாகி உள்ளனர்.
இதனை தொடர்ந்து தேங்காய் பட்டத்தில் உள்ள மீனவர்கள் மீனவ அமைப்புகள் மூலம் பல முறை துறைமுக கட்டமைப்பு குளறுபடிகளை சீரமைத்து தர கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இதுவரை அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் அரபிக் கடலில் மீன் பிடி தடைகாலம் முடிந்து மீண்டும் கடந்த ஒன்றாம் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
அந்த வகையில் தேங்காய் பட்டினம் மீன்பிடித் துறைமுக மீனவர்கள் இன்று மீன் பிடிக்கப் புறப்பட்டனர். இதில் ஒரு விசைப்படகு துறைமுகத்தில் இருந்து வெளியே செல்லும் போது முகப்பு பகுதியில் மணலில் சிக்கியது. இதனால் படகை இயக்க முடியாத நிலை ஏற்பட்டு படகு நிலை குலைந்து மணல் தட்டி நின்றது.
இதனால், மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியவில்லை. மீன் பிடி துறைமுகத்தின் முகப்பு கட்டுமான பணிகளை சீரமைத்து தந்தால் மட்டுமே இயல்பாக மீன்பிடிக்க செல்ல முடியும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சிமாணவி விவகாரம் - சமூக ஊடகங்கள், பத்திரிகை துறையினருக்கு சிபிசிஐடி எச்சரிக்கை!