குமரி மாவட்டம், ஈத்தாமொழி அருகே செம்பொன்கரையைச் சேர்ந்தவர் நடராஜன் (67). ஓய்வு பெற்ற கருவூல ஊழியரான இவர் நேற்று முன்தினம் (பிப்.21) மகா சிவராத்திரியை முன்னிட்டு தனது வீட்டைப் பூட்டிவிட்டு அருகில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றார். பின்னர் நேற்று காலை திரும்பிய அவர் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து, அதில் இருந்த 18 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன என்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடம் வந்த ஈத்தாமொழி காவல் துறையினர் கைரேகைகள், ஆவணங்களைச் சேகரித்தனர்.
பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோல குமரி மாவட்டம், தெங்கம்புதூரைச் சேர்ந்தவர் ராஜேஷ் (37). இவரும் மகா சிவராத்திரியை முன்னிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு, தனது மனைவியுடன் கோயிலுக்குச் சென்றுவிட்டு. பின்னர் நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது.
மேலும் பீரோவில் இருந்த ரூ.32 ஆயிரம் ரொக்கம், நகைகள் திருடப்பட்டிருந்தன. தகவலறிந்து வந்த சுசீந்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் சிவராத்திரியை முன்னிட்டு கோயில்களுக்குச் சென்றவர்களின், வீடுகளை நோட்டமிட்டு, திருடிய கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 35 ஆயிரம் ரூபாய் பணம், சிகரெட் பண்டல்கள் - காவல் உதவி மையத்தின் அருகிலேயே கொள்ளை!