மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுதுறை சார்பில் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற மாநிலங்களுக்கு இடையேயான இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சிக்காக ஜம்மு, காஷ்மீரைச் சேர்ந்த 8 மாவட்டங்களிலிருந்து 42 இளைஞர்கள் கடந்த 4ஆம் தேதி தங்களது சொந்த ஊரிலிருந்து நேரு யுவகேந்திரா உதவி இயக்குனர் சம்பத்குமார் தலைமையில் பல்வேறு மாநிலங்கள் வழியாக கடந்த 8ஆம் தேதி சென்னை வந்தனர்.
சென்னை, மகாபலிபுரம்,புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர்கள் பேருந்து மூலம் நேற்று கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தனர். அவர்களை கன்னியாகுமரி மாவட்ட நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பாலாஜி வரவேற்றார்.
பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே இந்த இளைஞர்களை சந்தித்து பேசும்போது, "இந்தியாவின் தென் எல்லைக்கு வந்துள்ள உங்களை மாவட்டம் சார்பில் வரவேற்கிறேன். கன்னியாகுமரி மாவட்டம் பரப்பளவில் சிறிய மாவட்டம் என்றாலும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. கல்வியறிவு, கலாசாரம், பண்பாடு போன்ற பல்வேறு சிறப்புகளில் மற்ற மாவட்டங்களுக்கு முன்னோடியாக குமரி மாவட்டம் திகழ்கிறது.
சுற்றுலாத் தலங்கள் நிறைந்த இந்த மாவட்டம் முழுவதும் சென்று நீங்கள் பார்வையிட வேண்டும்" என்றார். தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபம், முக்கடல் சங்கமம், அரசு அருங்காட்சியகம் போன்றவற்றை பார்வையிட்ட அவர்கள் புதுச்சேரி புறப்பட்டு சென்றனர்.
வருகின்ற 22ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநரைச் சந்திக்கும் அவர்கள் 23ஆம் தேதி தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை சென்னை நேரு யுவகேந்திரா செய்துள்ளது.
இதையும் படிங்க: தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிருப்பு போராட்டம்!