சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் மையம் விவேகானந்தபுரத்தில் உள்ளது. இந்த நுழைவுக்கட்டணம் மையத்தை நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் ஏலதாரர் பல ஆண்டுகளாக நடத்தி வந்தார்.
நீதிமன்ற உத்தரவையடுத்து இந்தாண்டு வசூல் மையத்தை பொது ஏலத்தில் விட கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவர்கள் 25 லட்சம் ரூபாய் வங்கியில், வரைவு காசோலையாக செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கான ஏலம் கடந்த வாரம் நடைபெற்றபோது, தற்போதைய ஏலதார் மட்டும் ஏலத்திற்கான வரைவு காசோலையையும் விண்ணப்பத்தையும் அனுப்பியிருந்தார். வேறு யாரும் ஏலத்தில் கலந்து கொள்ளாததால் பேரூராட்சி நிர்வாகம் ஏலத்தை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்நிலையில், கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட டிஎஸ்பி பாஸ்கரன் முன்னிலையில், இன்று ஏலம் நடைபெற்றது. ஏலத்தை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ் நடத்தினார். இதில் விவேகானந்தபுரத்தை சேர்ந்த ரஜகிருஷ்ணன் என்பவர் 75 லட்சத்து 1000 ரூபாய் செலுத்தி நுழைவுக் கட்டணம் மையத்தை ஏலத்தில் எடுத்தார்.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் கேட்டபோது, கன்னியாகுமரி விவேகானந்தபுரம் வாகன நுழைவு மையம் ஏலம் முடிந்துள்ளது. அடுத்த ஆண்டு 5 விழுக்காடு அதிகரிக்கப்பட்டு ஏலதாரருக்கு வழங்கப்படும். இந்த ஏலகாலம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரும். ஜிஎஸ்டி தொகையுடன் சேர்த்து மொத்தம் 89 லட்சத்து 26 ஆயிரத்து 190 ரூபாய் ஏலதாரர் செலுத்த வேண்டும் என அவர் கூறினார்.