இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா மையமாகத் திகழ்கிறது. கடந்த மார்ச் மாதம் கரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ஆறரை மாதமாகக் கன்னியாகுமரியில் சுற்றுலா மையங்கள் அனைத்தும் முடங்கின. இதனால் படகு இல்லம், அரசு தங்கும் விடுதிகள், சுற்றுலாத்துறை என அரசுத்துறைகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள், பிற வர்த்தகர்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு மக்கள் ஏதுவுமின்றி வெறிச்சோடியது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு சற்று தளர்த்தப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பவும் துளிர்க்க ஆரம்பித்தது. நீலகிரி தவிர மற்ற சுற்றுலாத் தலங்களுக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல தற்போதும் தடை நீடித்து வருகிறது. ஆனால் இந்தத் தடையைச் சற்றும் பொருட்படுத்தாத சுற்றுலாப் பயணிகள் விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் குவிந்தனர். ஆறு மாதங்களாக வெளியில் செல்லாமல் வீட்டில் அடைபட்டுக் கிடந்த மக்கள் தங்கள் மனதைப் புத்துணர்வு படுத்த கடற்கரைக்கு வந்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
அதிகாலை திரிவேணி சங்கமத்தில் சூரிய உதயத்தைப் பார்வையிட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். பின்னர் கடலில் புனித நீராடி பகவதியம்மன் கோயிலில் அம்மனை தரிசனம் செய்து, மாலை சன்செட் பாயிண்ட் கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தைக் கண்டு ரசித்தனர். சுற்றுலா தளங்களில் முக்கிய பகுதியான காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் மற்றும் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி திருவள்ளுவர் சிலை ஆகியவற்றைப் பார்வையிடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் கடற்கரை பகுதிகளிலேயே தங்கள் நேரத்தைச் செலவழித்து விட்டுச் செல்கின்றனர்.
கன்னியாகுமரியில் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல தடை நீடித்து வரும் நிலையில், தொற்றைப் பரப்பும் வகையில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் விடுமுறை நாளான இன்று(அக்-18)சுற்றுலாப் பயணிகள் குவிந்தது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே சுற்றுலாப் பயணிகளுக்குக் காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்
இதையும் படிங்க: இந்தியாவில் கரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது - மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!