குமரி மாவட்டம் பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. அக்கால கட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று குற்றங்கள் குறைந்து, மக்கள் அமைதியாக, வாழ்வதற்காக பாரம்பரியமாக ஆண்டுதோறும் தக்கலை காவல் துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் இணைந்து விரதமிருந்து முருகன் கோயிலுக்கு காவடி ஏந்தி சென்று நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில், அதேபோன்று இந்த ஆண்டும் கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமையான இன்று தக்கலை காவல் நிலையத்திலிருந்து காவலர்களும், காவல் துறை அலுவலர்களும் காவடி பவனியுடன் சென்றனர். அதுபோல், மழை பெய்யவும் நீர் வளம் செழிக்கவும் விவசாயம் எவ்வித குறையும் இல்லாமல் சிறப்பாக நடைபெறவும் பொதுப்பணி துறை அலுவலர்களும், ஊழியர்களும் தக்கலை பொதுப்பணித் துறை அலுவலகத்திலிருந்து காவடி பவனி சென்றனர்.
நெற்றிப்பட்டம் சூட்டிய யானை மீது பால்குடம் ஏந்தி முன் செல்ல, மேளதாளத்துடன் காவடி தூக்கி ஆடிய வண்ணம் அலுவலர்களும், காவல் துறையினரும் பவனி செல்வது தமிழ்நாட்டில் வேறு எங்கும் காணப்படாத பாரம்பரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிச்சைக்காரர் வேடமிட்டு வேட்புமனு தாக்கல்