கன்னியாகுமரி: மேற்குத் தொடர்ச்சி மலையோர பகுதிகளில் கனமழை - மாவட்டத்தில் அதிகபட்சமாக கோழிப்போர் விலையில் 132 மில்லி மீட்டர், தக்கலையில் 122 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது - விடியவிடிய கனமழையின் காரணமாகத் தாமிரபரணி ஆறு, பரளியாறு, கோதையாறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் பகுதியில் 26ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வருவதாகவும் ஏற்கனவே தமிழக கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகம் முழுவதும் கனமழையும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளைக் கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று (நவ.22) இரவு விடிய விடியக் கன மழை பெய்தது. நாகர்கோவில் ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, கிரிப்பாறை, தக்கலை, குலசேகரம் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக கோழிப்போர் விளையில் 132 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. இதே போன்று தக்கலை பகுதியில் 122 மில்லி மீட்டர் மழையும், மாம்பழத்துறையாறு அணைப்பகுதியில் 96 மில்லி மீட்டர் மழையும், ஆணைக்கிடங்கில் 95 மில்லி மீட்டர் மழையும், சிற்றாறு - 2 அணைப்பகுதியில் 87 மில்லி மீட்டர் மழையும், பதிவாகியுள்ளது.
இதனால், முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது இன்று (நவ.23) காலை நிலவரப்படி
- 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44.15 அடியாக உயர்ந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 762 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73.41 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 576 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 450 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால், குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளியாறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகளான தாமிரபரணி ஆறு, கோதையாறு, பரளியாறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக பேச்சிப்பாறை அணையிலிருந்து தற்போது 500கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இதேபோல், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 74அடியை நெருங்குவதால் அணையிலிருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையோர பகுதியான கோதையாறு அருகே மூக்கறைக்கல் மலையோர பகுதியில் பெய்து வரும் கன மழையால் சாலையில் திடீரென அதிகளவில் தண்ணீரில் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் மலை வாழ் மக்கள் சாலையைக் கடக்க முடியாமல் சிரமப்பட்டு சாலையைக் கடந்து சென்றனர்.
மேலும், வருகின்ற 26ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகி வருவதாகவும், இதனால், ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் வரும் 26ஆம் தேதிக்குள் கரை வந்து சேருமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு! கண்கவர் கழுகு பார்வை!