கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி, அண்ணா நகரைச் சேர்ந்தவர் அஸ்லிஸ் வினோ (39). இவர் கடற்கரைக்குச் சென்று மீன்களை விலைக்கு வாங்கி, ஊர் ஊராகச் சென்று வியாபாரம் செய்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி கலைவாணி என்ற மனைவியும், எட்டு வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர் நேற்று (ஜூன்.14) தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் மீன் வியாபாரம் செய்துவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டி, இரவு எட்டு மணியளவில் வழுக்கம்பாறை, அஞ்சுகிராமம் சாலையில் மயிலாடியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பார்க்கிங் லைட் போடாமல் நிறுத்தப்பட்ட வாகனம்
மயிலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் அவர் சென்றபோது, மயிலாடி அவரிவிளையைச் சேர்ந்த ரதின் என்பவர் மெயின் ரோட்டில் நோ பார்க்கிங்கில் தனது பொலிரோ வாகனத்தை நிறுத்திவிட்டு முறையாக பார்க்கிங் லைட் போடாமலும், ஒளிரும் பட்டைகள் வைக்காமலும் சென்றுவிட்டார்.
இதனை அறியாமல் வந்த அஸ்லிஸ் வினோ, பொலிரோ மீது மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்று சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் எனக் கூறியுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து அவரது மனைவி கலைவாணி அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், அஞ்சுகிராமம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.