கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் புகழ்பெற்ற நாகராஜா கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள பாலமுருகன் சன்னிதானத்தில், கந்தசஷ்டி விழா இன்று (நவ.13) யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
கந்தசஷ்டி நாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம். முக்கியமாக, குழந்தை பாக்கியம் வேண்டி முருகனை நினைத்து விரதம் இருந்தால், அந்த கந்தனே குழந்தையாக பிறப்பார் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
மேலும், சூரபத்மனை சம்ஹாரம் செய்து, முருகப்பெருமான் வெற்றிவாகை சூடிய தினமாக தான் இந்த கந்த சஷ்டி விழா அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு கந்தசஷ்டி விழா இன்று தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசை அன்று கந்தசஷ்டி விழா தொடங்குவது வழக்கம். முருகன் எழுந்தருளி உள்ள கோயில்களில் எல்லாம் பக்தர்கள் விரதத்தை தொடங்குவர்.
தொடர்ந்து 6 நாட்கள் இந்த விரதமானது கடைபிடிக்கப்படும். இவ்வாறு விரதம் இருப்பதன் மூலம் முருகனிடம் நாம் வேண்டிய வரம் கிடைக்கும் என்பதும், அடைய நினைக்கும் அனைத்து செல்வமும் வந்து சேரும் என்பதும் மக்களின் அசையா நம்பிக்கையாக உள்ளது. எனவே அன்றைய தினம் முருகனை வழிபட்டால், வாழ்வில் வெற்றி பெறலாம். இந்த விரதத்தின் 6ஆம் நாள் சூரசம்ஹாரம், 7ஆம் நாள் முருகனுக்கு அனைத்து கோயில்களிலும் திருக்கல்யாணம் நடைபெறும்.
சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகனை நினைத்து வழிபட்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பிள்ளை பேறு கிடைக்கும் என்பதும், குழந்தை செல்வத்தை வழங்கும் மகத்தான விரதங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது ‘கந்தசஷ்டி விரதம்’ என்றும், கந்தசஷ்டி விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் பதினாறு வகையான செல்வங்களை பெற முடியும் என்பது மக்களின் நம்பிக்கை.
அந்த வகையில், இந்த ஆண்டு கந்தசஷ்டி விழாவின் முதல் நாளான இன்று, நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயில் பால முருகன் சன்னிதானத்தில், கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியதை அடுத்து, பக்தர்கள் காப்பு கட்டி தங்கள் விரதத்தை தொடங்கி உள்ளனர்.
பால முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர், ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி தங்கள் விரதத்தை தொடங்கினர். பெண் பக்தர்கள் இன்று முதல் காப்பு கட்டிய 7 நாட்களும், கோயிலிலேயே தங்கி இருந்து பஜனைகள் பாடி, பூஜைகள் செய்வது வழக்கம். அதனால், இன்று கோயிலில் பஜனைகள் பாடி விரதம் இருந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்.. இதுவரை அகற்றப்பட்ட கழிவுகள் எவ்வளவு தெரியுமா?