குமாி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மாணவர்களைத் தாக்கியவர்களைக் கைது செய்யக்கோரியும் வகுப்பு புறக்கணிப்பு, உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினர்.
இதுகுறித்து மாணவர் சங்கத் தலைவர் பதில் சிங் கூறியதாவது: ' மத்திய அரசு அறிவித்த குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து கடந்த ஒரு மாதமாக பல்வேறு அமைப்புகள், மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்றன. இவர்கள் மீது சமீபத்தில் முகமூடி அணிந்த சில நபர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இவர்கள் மத்திய அரசின் பின்னணியில் செயல்படும் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.
இவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி நாங்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் '' என்றார்.