கேரளத்தை மாநிலத்தைச் சேர்ந்தவர் மாலதி (55). இவர் பல வருடங்களுக்கு முன்னதாகவே தனது கணவர் குட்டப்பன் நாயருடன் கன்னியாகுமரிக்கு வந்து புதிதாக வீடு கட்டி வசித்து வருகிறார். இவர்கள் கன்னியாகுமரியில் ஹோட்டல் நடத்துகின்றனர். இதில் இவரது கணவர் ஆறு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் கணவரின் தங்கையுடன் அந்த வீட்டில் தங்கி ஹோட்டல் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் திருவனந்தபுரம் பாறசாலையில் உள்ள தனது மகளைப் பார்ப்பதற்காக சென்று நேற்று வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 38 பவுன் தங்க நகைகள், 60 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாலதி கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். காவல்துறையினர் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தி, கொள்ளையர்களைப் பிடிக்க தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.