கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வடசேரி தழுவியபுரம் தெருவில் மார்பளவு எம்ஜிஆர் சிலை உள்ளது. இந்த சிலை அருகே அதிமுகவினர் ஜெயலலிதாவின் ஆளுயர சிலையை இன்று நிறுவினர். இது குறித்து சிலர் நாகர்கோவில் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடம் வந்த மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் அனுமதியின்றி சிலை வைக்கக்கூடாது என்று கூறி அதனை அகற்ற முயன்றார். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் ஜெயலலிதா சிலையை யாரும் அகற்றக்கூடாது என கூறியதுடன், சிலைக்கு மாலை அணிவித்து ஜெயலலிதா சிலையை அப்பகுதியில் பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அதிமுகவினர் அப்பகுதியில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த சிலையை அகற்றினால் நான் உயிரை விடுவேன் என ஆவேசமாக கூறிய மாவட்ட செயலாளர் அசோகன் அந்த இடத்தை விட்டு சென்றார்.
இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அந்தப் பகுதிக்கு மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மயில் தலைமையில் வந்த அலுவலர்கள் மீண்டும் சிலையை அகற்ற முயன்றனர். அப்போது அதிமுகவினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.பேச்சுவார்த்தை முடிவில் உரிய அனுமதி வாங்கிய பிறகு சிலையை இந்தப் பகுதியில் வைக்கலாம் என்றும் அதுவரை சிலை வைக்க அனுமதி கிடையாது என்றும் கூறினர். மேலும் சிலையை எடுத்து போவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர்.
இதனை தொடர்ந்து அதிமுகவினர் ஜெயலலிதா சிலையை யாரிடமும் தரமாட்டோம். அனுமதி வாங்கும் வரை எங்களின் கட்டுப்பாட்டிலேயே சிலை இருக்கட்டும் என்று கூறி அதிமுகவினர் ஜெயலலிதா சிலையை அங்கிருந்து எடுத்து சென்றனர்.