கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈரான் நாட்டின் பல்வேறு தீவுகளில் தங்கி மீன்பிடித்தொழில் செய்துவந்தனர். கரோனா தொற்று தீவிரமடைந்ததையடுத்து, அங்கிருந்து இவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் உறவினர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துவருகின்றனர்.
இருப்பினும், வெளியுறவுத் துறை அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே ஈரானில் உள்ள மீனவர்கள் தங்களை மீட்கக்கோரி அங்கிருந்து பல்வேறு காணொலிகளை வெளியிட்டுவந்தனர்.
இந்த நிலையில் தற்போது புதிய காணொலி ஒன்றை மீனவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் அரேபிய முதலாளிகளுடன் அந்நாட்டு காவல் துறையினர் இணைந்து மீனவர்களை மீன்பிடிக்கச் செல்ல கட்டாயப்படுத்தும் காட்சிகள் உள்ளன.
இது குறித்து தெற்காசிய மீனவர் தோழமை கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் வெளியிட்டுள்ள காணொலியில், "ஈரானின் சிக்கித்தவிக்கும் 700-க்கும் மேற்பட்ட மீனவர்களைத் தனி விமானத்தில் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்திய வெளியுறவுத் துறை அலுவலர்கள் அந்நாட்டு காவல் துறையினரைத் தொடர்புகொண்டு கரோனா தாக்கம் இருப்பதால் மீனவர்களை மீன்பிடிக்க கட்டாயப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஈரான் நாட்டின் தனி தீவில் தவிக்கும் தமிழ்நாடு மீனவர்கள் - வெளியான வாட்ஸ் ஆப் வீடியோ