கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர், யூஜின் மரிய ஸ்டாலின் (37). இவர் வெளிநாட்டில் சில ஆண்டுகளாக இன்ஜினியராகப் பணிபுரிந்து வந்த நிலையில், சமீபகாலமாக வேலையின்றி சொந்த ஊரில் உள்ளார்.
இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஹோலி கிராஸ் நகர் பகுதியைச் சேர்ந்த ஹேசில்டா மேரி (33) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இதுவரை குழந்தைகள் இல்லை. இந்நிலையில் தம்பதிகளுக்கிடையே அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டன.
இதைத்தொடர்ந்து தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதோடு விவாகரத்துக்கான சட்டரீதியிலான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில்(ஆகஸ்ட் 3) ஹோலி கிராஸ் நகரிலுள்ள ஹேசில்டா மேரி தங்கியுள்ள, அவரது தாய் வீட்டிற்கு யூஜின் மரிய ஸ்டாலின் சென்றுள்ளார்.
அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த யூஜின் மரிய ஸ்டாலின் வீட்டு வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள, 2 சொகுசு கார்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதில் கார்களின் பெரும்பகுதி தீக்கிரையானது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஹேசில்டா மேரியின் குடும்பத்தினர், ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து யூஜின் மரிய ஸ்டாலினை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.