கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியான மத்தம்பாலைப் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு. கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப் படையில் பணியாற்றிவரும் இவர் டிக்டாக் பிரபலம்.
இவரது கணவர் பிங்கோ ஆல்பின் பளுகல், செறுவாரகோணம் போன்ற தமிழ்நாட்டுப் பகுதிகளிலும் கேரளாவிலும் நகை அடகு பிடிக்கும் பைனான்ஸ் நடத்திவந்துள்ளார். கடந்த ஓராண்டிற்கு முன்பு இந்த நிறுவனங்களை திடீரென மூடிவிட்டு பிங்கோ ஆல்பின் தலைமறைவானார்.
கேரளாவில் இது சம்பந்தமாக நகை கொடுத்து கடன் பெற்ற பலர் கொடுத்த புகாரின்பேரில் கேரள மாநிலம் பாறசாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதில் பிணை எடுத்து கடந்த ஓராண்டாக தலைமறைவு வாழ்க்கை நடத்திவந்த பிங்கோ ஆல்பின் நேற்று (ஆக. 27) வீட்டிற்கு வந்ததாகத் தகவல் கிடைக்கவே பாதிக்கப்பட்டவர்கள் திடீரென அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது அஞ்சுவின் தந்தை பாதிக்கப்பட்டோரை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டதோடு அது சம்பந்தமான காணொலியை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
போராட்டம் தொடரவே வீட்டைப் பூட்டிவிட்டு அஞ்சுவின் தந்தை உள்ளே சென்றார். வெளியே பாதிக்கப்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டோர் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் நடத்தப்போவதாகத் தெரிவித்தனர்.
மேலும் தமிழ்நாடு காவல் துறையினர் உடனடியாகத் தாங்கள் கொடுத்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த காவல் துறையினர் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். மேலும் மனைவி காவல் துறையில் பணியாற்றுவதால் வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடிப்பதாகப் பாதிக்கப்பட்டோர் குற்றஞ்சாட்டினர்.