கன்னியாகுமரி: அரசியல் முன்னணி தலைவர்கள் வரும் போதும், தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ் போன்ற பண்டிகை காலங்களிலும், மாநாடு பொதுக் கூட்டங்கள் நடைபெறும் போதும் அரசியல் கட்சி நிர்வாகிகள், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் சிலர் தங்கள் நிகழ்ச்சிகளுக்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இவர்களுக்கு பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், தொழில் அதிபர்கள் சிறு மற்றும் பெரிய கடைகள் என அவர்களால் கொடுக்க முடிந்த நிதியைக் கொடுத்தும் வருகின்றன. இந்த நிலையில் இந்து சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு டொனேஷன் கேட்டு தகராறில் ஈடுபட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ பேராயத்தின் கீழ் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன நாகர்கோவில் வடசேரி பகுதியில் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ பேராய நிர்வாகத்தால் இயக்கப்பட்டு வரும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரிக்கு நேற்று காரில் மூன்று பேர் வந்து உள்ளனர். இவர்கள் கல்லூரி அலுவலகத்தில் சென்று எங்களுக்கு டொனேஷனாக பணம் தாருங்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது நீங்கள் யார் எதற்காக உங்களுக்குப் பணம் தர வேண்டும் என்று கேட்ட போது, வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
வீடியோ பதிவில், "நாங்க விநாயகர் சதுர்த்திக்குக் காசு வாங்குவோம், அன்னதானத்துக்குப்ப காசு வாங்குவோம் இதெல்லாம் தப்பா சார்? என்றும், நீங்க யார் என்று கேட்ட நபரிடம் நாங்க இந்து சேனா.. நரேந்திர மோடி.." என்றும் அழுத்தமாகக் கூறும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
அதே போன்று கல்லூரி வளாகத்திலும் அலுவலக அறைக்குள்ளும் வாக்குவாதம் நடந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று பேர் பணம் கேட்டு வந்த நிலையில், தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்த போது அதில் ஒருவர் "நாங்க இந்து சேனா.. விஷ்ணு பக்தர்கள்.. காசு கேட்கக் கூடாதா?" என்று கூறி வெகுளித்தனமாகச் சண்டையிட்ட காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: "சிலிண்டரை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைந்தாலும் ஆச்சரியம் இல்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!