கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் இன்று நண்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் மழை பெய்வதற்கு ஏதுவாக காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலை சுமார் 4 மணிமுதல் மாவட்டத்தின் பல இடங்களில் திடீரென கனமழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறு போல் ஓடியது. மேலும் ஆங்காங்கே இருந்த பள்ளங்களில் தண்ணீர் அதிகளவு தேங்கியது. இதனால் மாவட்டத்தின் பல இடங்களில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக நாகர்கோவில், கோட்டார், வடசேரி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவிற்கு, மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
மேலும் மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளைவிட்டு மாணவர்கள் வீடு செல்ல முடியாமல் தவித்தனர். குமரியில் பெய்த இந்த திடீர் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
இதையும் படிங்க: பென்னாகரத்தில் கோடைமழை தொடக்கம் - விவசாயிகள் மகிழ்ச்சி