கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக திறந்த நிலையில் கழிவு நீர் கால்வாய் ஒன்று அமைந்துள்ளது.
அப்பகுதி சுற்றுவட்டார குடியுருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் இந்தக் கால்வாயில் கலக்கிறது. இந்நிலையில் கால்வாய் கடந்த ஏழாண்டுகளாக தூர்வாரப்படவில்லை.
இதன் காரணமாக கால்வாய் முழுவதும் சாக்கடை நீர் தேங்கியும், குப்பைகள் நிறைந்தும் சுகாதார கேடாக காணப்படுகிறது.
குறிப்பாக தோவாளை ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக இந்த கால்வாய் செல்வதால் ஆரம்ப சுகாதார நிலையம் சுற்றுப்பகுதி முழுவதுமாக மிகவும் அசுத்த நிலையில் காணப்படுகிறது.
இதனால் தொற்று நோய்களை உண்டாக்கும் கொசுகள் உற்பத்தி செய்யும் இடமாக மாறி உள்ளது. கழிவு நீர் கால்வாயை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தினார்கள்.
இதனை தொடர்ந்து கடந்த இந்த கழிவு நீர் கால்வாய் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் தூர் வாரப்படும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 110 விதியின் கீழ் தமிழ்நாட்டில் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அறிவித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கடந்த பின்னரும் இதுவரை கழிவு நீர் கால்வாய் தூர்வார எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கிடையில் இப்பகுதியில் வேகமாக பரவி வரும் தொற்றுநோயால் பலர் பாதிப்படைந்துள்ளனர்.
ஆகவே இக்கால்வாயை தூர்வாரி கொசு உற்பத்தியை தடுத்து தொற்று நோய் அபாயத்தில் காக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை. இது நிறைவேறாதபட்சத்தில் பொதுமக்கள் மீண்டும் போராட்டம் நடத்த ஆயத்தமாகிவருகின்றனர்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் - டிடிவி தினகரன்!