கன்னியாகுமரி: கீரிப்பாறை, காளிகேசம், பரளியாறு உள்ளிட்ட குமரி மாவட்டம் முழுவதும் ஒன்பது கோட்டங்களில் தமிழ்நாடு அரசின் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. அரசு ரப்பர் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த ரப்பர் தோட்டங்களில் உள்ள ரப்பர் மரங்களில் இருந்து ரப்பர் பால் வெட்டி எடுத்தல், அதனை பதப்படுத்தி ரப்பர் சீட்டுகளாக மாற்றுதல் உள்ளிட்டப்பணிகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட தொழிலார்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து ஊதிய ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டிய ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. எனவே, 2019ஆம் ஆண்டு முதல் அன்றைக்கு இருந்த அதிமுக அரசோடு பல கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தியும் எந்தவித முடிவும் ஏற்படவில்லை.
தற்போது வந்த திமுக அரசிடம் 67 கட்ட பேச்சுவார்த்தைகளை தொழிற்சங்கங்கள் அரசுடன் நடத்தியுள்ளன. கடந்த மாதம் 16ஆம் தேதி சென்னையில் வனத்துறை அமைச்சர், வனத்துறை தொழிலாளர் மற்றும் தொழில் நுட்பத்துறை ஆகிய மூன்று அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் 40 ரூபாய் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் எனப் பேசி முடிக்கப்பட்டது.
அது சம்பந்தமாக இரு தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில் அதனை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமான பேச்சுவார்த்தையில் அலுவலர்கள், அமைச்சர்கள் கூறிய ஊதிய உயர்வினை தர முடியாது என உறுதி அளித்துவிட்டனர்.
இதனால் ரப்பர் தோட்டத்தொழிலாளர்கள் இன்று காலை கூடி ஆலோசனைக்குப்பின்னர் வேலைக்குச் செல்லாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசுக்கு நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரப்பர் தோட்டத்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் தோட்டங்களில் ரப்பர் பால் எடுக்கும் தொழில் முற்றிலுமாக முடங்கியது. ஆகவே தமிழ்நாடு அரசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: குமரியில் ராஜீவ் காந்தி சிலையை உடைக்க முயற்சி.. நடந்தது என்ன?