தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது ஊரடங்கு காரணமாக, பொது போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டது. ஊரடங்கில் அமல்படுத்தப்பட்ட தளர்வால், செப்டம்பர் மாதம் முதல் பேருந்து சேவை தொடங்கி செயல்பட்டுவருகிறது. தமிழ்நாடு முழுவதும் 60 முதல் 70 விழுக்காடு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுவருகின்றன.
ஊரடங்கு காலத்துக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.80 லட்சம் வரை அரசு போக்குவரத்து கழகத்துக்கு கிடைத்துவந்தது. பேருந்துகள் இயக்கம் குறைவு காரணமாக, தற்போது வருவாய் ரூ.40 லட்சமாக குறைந்தது. பேருந்து இயக்கச் செலவுகளை குறைப்பதற்கு, மாவட்ட போக்குவரத்து உயர் அலுவர்கள் டீசல் கெடுபிடியை அதிகரித்துவருகின்றனர்.
குறிப்பிட்ட அளவு டீசலுக்கு மேல் பேருந்து ஓட்டுநர்கள் பயன்படுத்தினால், அவர்களை பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு 'விடுப்பாக' அறிவித்துவிடுகின்றனர். சமீபத்தில் குளித்துறை பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர் மணிகண்டன் என்பவரை பயிற்சி வகுப்புக்கு அனுப்பி வைத்து வேலை தராமல் அலுவலர்கள் அலைக்கழித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, மன உளைச்சலுக்கு ஆளான அவர், தான் தற்கொலை செய்யப்போவதாக வாட்ஸ்-அப்பில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், 'டீசல் அதிகம் செலவாகிறது என அடிக்கடி பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். டீசலை குறைவாகப் பயன்படுத்த மெதுவாக செல்ல வேண்டியிருக்கும். அப்படி சென்றால் அவசரமாக வேலைக்குச் செல்லும் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். ஓட்டுநர்களை நம்பாமல் பி.எஸ்.4 ரக பேருந்துகளை மட்டும் இயக்க அனுமதி அளிக்கின்றனர்.
இதுபோன்று பல்வேறு காரணங்களால் மன உளைச்சல் அடைந்த நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். அதற்கு காரணம் எனது உயர் அலுவலர்கள்தான்' என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் தற்கொலை செய்யப்போவதாக வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பயணிகள் குறைவு...மந்த நிலையில் தனியார் பேருந்து சேவை!