கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி, வடக்கன்குளத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் நடத்துநர் தவறி விழுந்த சம்பவம் நடந்துள்ளது.
அரசுப் பேருந்து ஓட்டுநரும், நடத்துநர் மகாலிங்கமும் இன்று(டிச.14) காலை வழக்கம் போல பேருந்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக வழிகாட்டு நெறிமுறைகளின்படி குறைந்த அளவு பயணிகளை மட்டுமே ஏற்றிக்கொண்டு வாகனம் சென்று கொண்டிருந்தது.
பேருந்து ஆராய்வாய் மொழியிலிருந்து சிறிது தூரம் சென்றுகொண்டிருக்கையில், பயணிகளிடம் தொடர்ந்து ஏதோ உரையாடல் நடைபெறுவதைக் கவனித்த ஓட்டுநர், அவர்களிடம் என்ன ஆயிற்று எனக் கேட்டுள்ளார். இதையடுத்து பயணிகள் பயணச்சீட்டு எடுக்க பேருந்தில் நடத்துநர் இல்லை எனக் கூறியுள்ளனர்.
இதைக்கேட்ட ஓட்டுநர் அதிர்ச்சியடைந்து, நடத்துநரைத் தேடியுள்ளார். பேருந்தில் இருந்த பயணிகள் முப்பந்தல் வரை நடத்துநர் இருந்ததை கண்டதாகவும், அப்பொழுது அவர் பயணச்சீட்டு அளித்ததாகவும் தெரிவித்தனர். அந்த பேருந்து நிறுத்தத்தைக் கடந்து 5 கி.மீ.,ஆன பின்பே பயணிகளுக்கு பேருந்தில் நடத்துநர் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.
இதற்கிடையில் நடத்துநர் மகாலிங்கம் முப்பந்தல் அருகே பேருந்திலிருந்து கீழே விழுந்து காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஓட்டுநருக்கு போக்குவரத்து கழகத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது. இதனால் பதறிய ஓட்டுநர் பின்னால் வரும் அரசுப் பேருந்தில் பயணிகளை மாற்றி அனுப்பிவைத்து மகாலிங்கத்தைப் பார்க்கச் சென்றுள்ளார். கீழே விழுந்த பதற்றத்தில் அவரும் ஓட்டுநருக்கு தகவல் அளிக்க மறந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
பின்னர் இச்சம்பவத்தை அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த காவல் துறையினர், பாதிக்கப்பட்ட நபரும், போக்குவரத்துக் கழகமும் புகார் அளிக்க முன்வராததால் விவரங்களை சேகரித்துச் சென்றுள்ளனர்.
மகாலிங்கம் எவ்வாறு கீழே விழுந்தார். அவருக்கு ஏதேனும் மருத்துவப் பிரச்னைகள் உள்ளதா என மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்தபோது, அவருக்கு எவ்வித உடல் பிரச்னைகள் இல்லை எனவும், பயணச் சீட்டு விவரங்களை குறித்துக் கொண்டிருந்தபோது, பேருந்து வளைவதை கவனிக்காமல் கீழே விழுந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், அவர் கீழே விழுந்த அதிர்ச்சியில் பிறருக்குத் தகவல் அளிக்க மறந்ததாகவும், அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தாகவும் கூறினர். லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதால் அவர் முதலுதவி சிகிச்சைகளைப் பெற்று தற்போது வீடு திரும்பிவிட்டார் எனவும் மருத்துவமனைத் தரப்பு தெரிவித்தது.
இச்சம்பவம் குறித்து போக்குவரத்துத்துறை அலுவலர்களிடம் விசாரித்தபோது, ’இது தனி நபரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து. இதுகுறித்து புகாரளிக்க இயலாது. இவருக்கு ஆகும் சிகிச்சை கட்டணத்தை போக்குவரத்துத் துறை காப்பீட்டின் மூலம் ஏற்கும்’ எனத் தெரிவித்தனர்.
பேருந்தில் நடத்துநர் ஒருவர் கீழே விழுந்தது கூட அறியாமல் பயணிகள் இருந்துள்ளனர். இதனால் இந்தப் பேருந்து, நடத்துநர் இன்றி 5 கி.மீ., வரை பயணித்துள்ளது அப்பகுதி மக்களிடம் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: தருமபுரியில் சாலை விபத்து: லாரி ஓட்டுநர் கைது!