கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் கரோனா நோயாளிகளுக்காக சிகிச்சையளிக்க ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி, ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வள்ளன்குமாரன்விளையிலுள்ள தெருவில் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு பேருக்குக் கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அந்தப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும், கரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்பட்ட கடைகள், முகக்கவசம் அணியாமல் சென்ற நபர்களுக்கு சுகாதார ஆய்வாளர் பகவதிபெருமாள் 3ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் விதித்தார். அதேபோல, அவிட்டம் மகாராஜா காப்பக மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாடுவதற்காக சென்ற மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும், முகக்கவசங்களும் வழங்கப்பட்டன.
நாகர்கோவில் செட்டிகுளத்திலுள்ள சினிமா தியேட்டரில் கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் செயல்படுவதாக மாநகராட்சிக்குக் கிடைத்த புகாரைத் தொடர்ந்து, ஆணையர் ஆஷா அஜித் ஆய்வு மேற்கொண்டு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
இதேபோல், கோவையிலிருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து இன்று (ஏப்.13) நாகர்கோவில் வந்தது. அந்தப் பேருந்தின் நடத்துனர் நேற்று முன்தினம் கரோனா பரிசோதனை செய்திருந்தார்.
பரிசோதனை முடிவு வெளிவராத நிலையில், பேருந்தில் வந்தபோது திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதையும் படிங்க: கரோனா விதிகளைப் பின்பற்றவில்லை: நாள்தோறும் 500-700 பேர் மீது வழக்குப்பதிவு