கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியிலுள்ள பால் கடை ஒன்றில் கடந்த சில நாள்களுக்கு முன் திருட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றது. இது குறித்து கடையின் உரிமையாளர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், தக்கலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் சில நாள்களுக்கு முன் தக்கலை பகுதியிலுள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்துகொண்டு உள்ளே நுழைய திருடன் முயன்றுள்ளான். ஆனால், வீட்டிலிருந்தவர் விழித்ததால் திருடன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். தக்கலைப் பகுதிகளில் இவ்வாறு தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுவந்தன.
இந்நிலையில், இன்று காலை அப்பகுதியிலுள்ள ஆள் இல்லாத வீட்டிலிருந்து குறட்டை சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, இளைஞர் ஒருவர் தூங்கிக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
திருடனை காட்டிக்கொடுத்த குறட்டை!
சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தக்கலை காவலர்கள், அந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த நபர் கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பது தெரியவந்தது. சதீஷ் அங்கிருந்த வீட்டிற்கு திருட சென்றுள்ளான். ஆனால், அங்கு பொருள்கள் ஏதும் இல்லாததால் விரக்தியடைந்து, வீட்டிலிருந்த மீன் குழம்பை சட்டியுடன் தூக்கிச்சென்று மொட்டை மாடியில் வைத்து ஒரு பிடி பிடித்துவிட்டு, அப்படியே அசதியில் மாடியிலேயே தூங்கியுள்ளான்.
மேலும், அப்பகுதியில் நடைபெற்ற மற்ற திருட்டுச் சம்பவங்களின் சிசிடிவி காட்சிகளையும் காவல் துறையினர் ஆராய்ந்துள்ளனர். அதில், சுற்றுவட்டாரத்தில் தொடர் திருட்டில் சதீஷ் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் சதீஷை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். கைதுசெய்யப்பட்ட சதீஷ் மீது கேரளாவில் ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரவுடி பினு ஸ்டைலில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்: 7 பேர் கைது!