சேலம்
காந்தி விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 71ஆவது குடியரசு தின விழா வெகு விமரிசையாக கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் தேசியக்கொடியை பறக்கவிட்டு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா காணிகர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர். தேசியக்கொடியை பறக்கவிட்ட பின் மாவட்ட ஆட்சியர், காவல் துறை அலுவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்களை அணிவித்து கெளரவித்தார்.
இந்நிகழ்வில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவர்களின் வாரிசுகள் சேலம் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து அவமதிக்கப்படுவதாகப் புகார் தெரிவித்து முழக்கமிட்டனர். இதனையடுத்து அவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் சேலம் மாவட்ட காவல் துறையினர் ஈடுபட்டனர்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் சங்கத்தின் செயலாளர் பெரியசாமி கூறுகையில், "ஒவ்வொரு சுதந்திர தின, குடியரசு தின விழாவின்போதும் தியாகிகள், அவர்களின் வாரிசுகள் முறையாக கெளரவிக்கப்படுவது இல்லை.
சேலம் மாவட்ட நிர்வாகம் தொடர்ச்சியாகச் சுதந்திரப் போராட்ட தியாகிகளை அவமதித்துவருகிறது. இது குறித்து பிப்ரவரி மாதம் முதலமைச்சரை நேரில் சந்தித்து எங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கவிருக்கிறோம்” என்றார்.
கன்னியாகுமரி
நாட்டின் 71ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தேசியக் கோடியை பறக்கவிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை அவர் பார்வையிட்டார். பின்னர் முன்னாள் படை வீரர்கள் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக பாதுகாப்புத் திட்டம், வேளாண்மைத் திட்டம் ஆகிய துறையின் கீழ் 15 பயனாளிகளுக்கு 92 ஆயிரத்தி 352 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். விழாவை முன்னிட்டு மூன்றடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் புதுச்சேரி தலைமைச் செயலகம்!