கன்னியாகுமரி: தக்கலை அருகே உள்ள குமாரபுரம் கன்று பிலாவிளை பகுதியைச் சேர்ந்தவர் ரெஜிலின் மனோ(35). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி அஜி(32) பட்டப்படிப்பு முடித்து உள்ளார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவருடைய தாயாரிடம் தக்கலைக்கு செல்வதாகக் கூறி விட்டு 2 குழந்தைகளையும் அஜி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. இது குறித்து அஜியின் தாயார் கொற்றிகோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் அஜியை தேடி வந்தனர். இதனை அறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 20க்கும் மேற்பட்டோர் கொற்றி கோடு காவல் நிலையத்தில் திரண்டனர். அப்போது அவர்கள் தங்களிடம் நகை, பணத்தை வாங்கி விட்டு அஜி திடீரென தலைமறைவாகி விட்டதாக புகார் அளித்தனர்.
பொதுமக்களின் அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜியை தேடி வந்தனர். மேலும் அஜிக்கு அவருடைய நண்பர் ரெதீஸ் என்பவரும் உதவியாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையே நேற்று அஜி மீது அவருடன் கல்லூரியில் படித்த முதலார் பகுதியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் கிங்ஸ்லி (34) என்பவரும் புகார் கொடுத்தார்.
அஜி அவரது நகையை மீட்க பணம் கடனாக தந்தால் திருப்பி தருவதாக என்னிடம் கூறினார். இதனை நம்பி 3 தவணையாக 2 லட்சத்து 43 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை ஆன்லைனில் அனுப்பினேன். பின்னர் கடனை திருப்பிக் கேட்ட போது அஜி ஏதாவது ஒரு காரணம் கூறி ஏமாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது என குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் போலீசார் விசாரணையில், அஜி மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக இருந்துள்ளார். அதனை வைத்து பெண்களுடன் பேசிப் பழகி அவர்களின் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி நிறுவனத்தில் கடன் வாங்கி மோசடி செய்ததாகவும், இதில் அவருக்கு ரெதீஸ் உதவியதாக இருந்ததும் தெரிய வந்தது.
மேலும் சிலரிடம் நகைகளையும் வாங்கி திருப்பி கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் அஜி மோசடி செய்த பணம் எவ்வளவு என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பின்னர் போலீசார் அஜி, ரெதீஸ் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் முட்டைக் காடு பகுதியில் அஜி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் சாமுவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து அஜியை கைது செய்தனர். மேலும் அஜியின் நண்பன் ரெதீஸை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் மீண்டும் ஒரு பாலியல் புகார்.. அலுவலக உதவியாளர் கைது..