கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள மலர் சந்தையிலிருந்து தமிழ்நாடு முழுவதும் பூக்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும்கூட பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தோவாளை மலர் சந்தையில் அனைத்து விதமான பூக்களும் கிடைப்பதால் வியாபாரிகள் போட்டிப் போட்டுக்கொண்டு இங்கிருந்து பூக்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் சில நாட்களாக உச்சத்தில் இருந்த பூக்களின் விலை தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது.
அதன்படி பிச்சிப்பூ விலை ரூ. 400இல் இருந்து ரூ.150-க்கும், மல்லிகைப்பூ விலை ரூ.300இல் இருந்து ரூ.150-க்கும், கனகாம்பரம் 250-இல் இருந்து ரூ.150 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல் மற்ற பூக்களின் விலையும் வெகுவாகக் குறைந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் பருவ மழை காரணமாக பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளதால், தோவாளை மலர் சந்தை பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பூக்களின் விலை வெகுவாகக் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.