கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, 'கன்னியாகுமரியில் இஸ்ரோவின் அறிவியல் அருங்காட்சியகம் அமைக்கத் திட்டம் உள்ளது. அதற்கான நிலத்தை மாநில அரசு வழங்கி உள்ள நிலையில் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.
வரும் 26ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தப்பட உள்ள ராக்கெட் மூலம் Ocean Sat என்னும் முக்கியமான செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மீனவ மக்கள் பெரிதும் பயன்பெற உள்ளனர்.
கடலில் ஏற்படும் காலநிலை மாற்றம், கடல் நீரோட்டம் உள்ளிட்டப் பல விஷயங்களைக் கண்காணிக்க முடியும். நேவி கருவி விரைவில் மீனவர்கள் பயன்பட்டிற்குக் கொண்டு வரப்படும். மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் முதல் கட்டமாக இயந்திர மனிதர்களை (ரோபோக்களை) அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதில் வெற்றி பெற்றால் மனிதர்களை அனுப்பும் திட்டம் வெகு விரைவில் நிறைவேறும்.
எதிர்காலத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை நிறைவேற்றத்திட்டம் உள்ளது. ஆகவே இஸ்ரோவை எந்த நாட்டுடனும் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. சந்திராயன் 2 மிஷன் புது தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டது. அதன் தோல்வியில் கிடைத்த பாடத்தைப் பயன்படுத்தி மிக விரைவில் தொடங்கவுள்ள அடுத்த மிஷன் கண்டிப்பாக வெற்றி பெறும்' என நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: இரண்டரை கிலோ எடைகொண்ட புலித்தோல் பறிமுதல்: 4 பேர் கைது