தமிழ்நாட்டில் கிழக்குகடற்கரையோர மீனவக் கிராமங்களில் உள்ள மீனவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லமாட்டார்கள்.
இந்த மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் இந்த 61 நாள்கள் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க தடை காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கிய மீன்பிடி தடைக்காலம் ஜூன் மாதம் 14ஆம் தேதி முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் விசைபடகு மீனவர்கள், படகுகள், வலைகளின் பழுதுகளை நீக்கி ஜூன் 14ஆம் தேதி மீன் பிடிக்க தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன் பிடி துறைமுகத்தில் உள்ள மீனவ சங்கங்க நிர்வாகிகள், கரோனா ஊரடங்கு மேலும் ஒரு வார காலம் நீட்டிக்க பட்டு உள்ளதால் ஜூன் 21 ஆம் தேதி மீன் பிடிக்க செல்ல முடிவு செய்து உள்ளனர்.
இதனையடுத்து சின்னமுட்டம் பகுதியில், விசைப்படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்கள் பழுது பார்ப்பு பணிகளில் தீவிரமாக மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
டீசல் விலை உயர்வு காரணமாக மானிய விலையில் டீசல், மீன்பிடி உபகரணங்கள் வழங்க அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்தது உள்ளனர்.