கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் தளவாய் சுந்தரத்தின் நெருங்கிய நண்பரான தோவாளை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், பெண் ஒருவருடன் ஆபாச செயலில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அதிமுகவினர் கிருஷ்ணகுமார், தளவாய் சுந்தரம் மீது பல்வேறு புகார்கள் கூறி நோட்டிஸ் அச்சடித்து மாவட்டம் முழுவதும் ஒட்டினர். இது குறித்து வெளியான நாளிதழ் செய்திகளை பிரதி எடுத்து, முதலமைச்சர் குமரி மாவட்டத்திற்கு வந்தபோது அவரிடம் வழங்கினர்.
தளவாய் சுந்தரத்திற்கு எதிராக அதிமுகவைச் சேர்ந்த சிலர் மறைமுகமாகவும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவும் தீவிர எதிர்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கிழக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரான நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், தளவாய்சுந்தரம் குறித்து பல்வேறு விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்தார்.
திமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு:
இதனை, ஏராளமானோர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இது தொடர்பாக தளவாய் சுந்தரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார். அதனடிப்படையில் கோட்டார் காவல் துறையினர், திமுக பிரமுகர் மீது பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுகவினருக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடுவது, மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தால், அந்த புகாரை காவல் துறையினர் கண்டுகொள்வதில்லை எனவும், ஆளும் கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தி புகார் அளிப்பவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் திமுக தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அதிமுக கொள்ளைக் கும்பலை விரட்டும் காலம் நெருங்கிவிட்டது - டி.ஆர்.பாலு பேச்சு