குமரி மாவட்டம் நீண்டகரை கிராமத்தை சேர்ந்தவர் அப்பாத்துரை. இவரது மகன் சிவராம்சிங், சீர்காழியில் மின்வாரிய போர்மேனாக பணியாற்றிவந்தார். இவரது மனைவி சுஜாதா, சீர்காழியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்துவருகிறார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், சிவராம்சிங் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாகக் கூறி, இன்று காலை அவரது உடல் குமரிக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து சிவராம்சிங்கின் தந்தை நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில் "சுஜாதாவிற்கும் அவர் வேலை பார்த்த பள்ளி தாளாளருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது. இந்தப் பிரச்னை ஏழு ஆண்டுகளுக்கு முன்பே காவல்துறையால் விசாரிக்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது அதே பள்ளியில் பணிபுரியும் உடல் பயிற்சி ஆசிரியர் ஒருவருடனும் திருமணத்தை மீறிய உறவு இருந்து. இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே பிரச்னை இருந்துவந்தது.
இந்த சூழ்நிலையில்தான் இரு தினங்களுக்கு முன் என் மகன், நான் கொலை செய்யப்பட்டுவிடுவேன் என்ற பயம் இருப்பதால் ஊருக்கு வருகிறேன் என்று கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், நேற்று சிவராம்சிங்கின் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும், அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளதாகவும் சுஜாதா நேற்று எனக்கு போன் செய்தார்.
ஆனால், இன்று காலை என் மகனின் உடலை மட்டும் அவர்கள் கொண்டுவந்தனர். திருமணத்தை மீறிய உறவு காரணமாகவே எனது மகன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவராம்சிங்கின் உடல், தற்போது உடற்கூறாய்வுக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி கார் மோதி உயிரிழப்பு