கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் நடைபெற்றுவருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் நெல் மணிகளைப் பாதுகாப்பாக வைக்கவோ, விற்பனை செய்யவோ நாகர்கோவில் பகுதிக்கு கொண்டுவரும் நிலை இருந்துவந்தது.
இந்நிலையில் புத்தளம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்துத் தர வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைவைக்கப்பட்டது. அப்போது விவசாய சங்கத்தினர் சிலர் அப்பகுதியிலுள்ள உப்பு ஆலையை நெல் கொள்முதல் நிலையமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியரிடம் கூறினர். இதைத்தொடர்ந்து உப்பு ஆலை, நெல் கொள்முதல் நிலையமாகப் பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டது.
தற்போது நெல் அறுவடை காலம் தொடங்கியுள்ளதால் அறுவடைசெய்த நெல்லை புதிய நெல் கொள்முதல் நிலையத்திற்குக் கொண்டுவந்தால் ஒரு டிராக்டர் நெல்லுக்கு நுழைவுக் கட்டணம், தரை வாடகை வேண்டும் என்று கூறப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் வேறு வழியின்றி பணத்தைக் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், "நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல்லை கொண்டுவந்தால் ஒரு டிராக்டர் நெல்லுக்கு ரூ. 250 வசூலிக்கிறார்கள். மேலும் ஒரு கோட்டை நெல்லுக்கு ரூ. 100 தர வேண்டும் என்று கட்டாயமாக வசூலிக்கிறார்கள். ஆனால் இதற்கு ரசீது தருவதில்லை.
அதேபோல கட்டணம் பெறப்படுவது குறித்து எந்த அறிவிப்புப் பலகையும் வைக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அலுவலர்கள் இதனை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க... விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தூங்கி வழிந்த அலுவலர்கள்