கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அடுத்த கணபதிபுரம் ஊரைச் சேர்ந்தவர் முருகன். இவர் சென்னையில் காவலராக வேலைப் பார்த்து வருகிறார். சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்த முருகன் அவரது மகன் படிக்கும் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்கச் சென்றார். பின்னர் இரவு வீடு திரும்பியபோது, அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த 7 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து முருகன் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதனடிப்படையில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ராஜாக்கமங்கலம், கணபதி புரத்தைச் சேர்ந்த அரவிந்த் (24) என்பது தெரியவந்தது.
காவலர்கள் தேடுவதை அறிந்த அரவிந்த் தலைமறைவாகிவிட்டார். பின்னர் வள்ளியூரில் மனைவி வீட்டில் பதுங்கியிருந்த அவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து மொத்தமாக 23 சவரன் நகைகளைக் காவல் துறையினர் கைப்பற்றினர். மேலும் அவர் கன்னியாகுமரியில் பல வீடுகள், கோயில்களில் திருடியதை காவல் துறையினரிடம் ஒப்புக்கொண்டதாக அறியப்படுகிறது.
இதையும் படிங்க: ரூ. 3 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருட்டு - 5 வடமாநில இளைஞர்கள் கைது!