தமிழ்நாடு முதலமைச்சரின் வருகையையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குமரி மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் மேற்பார்வையில் 1,300 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து காவல் துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் தங்கும் அரசு விருந்தினர் மாளிகை, விழா நடைபெறும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று மாலை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை முழுவதும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன.
முதலமைச்சர் தங்கும் அரசு விருந்தினர் மாளிகை, கலெக்டர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்த், எஸ்பி பத்ரி நாராயணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனைகள் நடைபெற்றன. மாவட்டத்தில் வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் இருந்து காரில் நாகர்கோவில் வரும் முதலமைச்சர் ஆரல்வாய்மொழி, தோவாளை, வடசேரி, காசி விஸ்வநாதர் கோயில் சந்திப்பு, டிஸ்லரி ரோடு வழியாக அரசு விருந்தினர் மாளிகைச் சென்றடைகிறார். இந்தப் பகுதிகளில் முதல்வரை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் வருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் மேற்பார்வையில் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு பாதுகாப்புக் கருதி போக்குவரத்து வழித்தடங்கள் இன்றும், நாளையும் மாற்றப்படுகிறது. கிறிஸ்தவ கல்லூரி சாலை ரோடு, ரோடு தலைமை தபால் அலுவலக ரோடு, அவ்வை சண்முகம் சாலை, கலெக்டர் அலுவலக சாலைகளில் எந்த போக்குவரத்தும் இன்றும் நாளையும் அனுமதிக்கப்படவில்லை.