மார்ச் 5ஆம் தேதி தமிழ்நாடு - கேரள எல்லையான செங்கோட்டை புளியரைப் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் , ராமர், ராஜேஷ்குமார், செல்வகுமார், முருகன், அன்பழகன், சிவபிரசாந்த், மணிகண்டன், சதிஷ் குமார் ஆகிய 9 தொழிலாளர்கள் ஒப்பந்தக்காரர் மூலம் மாறாமலை எஸ்டேட்டில் கிராம்பு பறிப்பதற்காக வந்துள்ளனர். இவர்களின் பணியானது 23ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இவர்களுக்கான ஊதியம் 25ஆம் தேதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் கரோனா வைரஸ் காரணத்தால் மத்திய, மாநில அரசுகள் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தன. இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால், சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் எஸ்டேட்டிலேயே அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான உணவும் தனியார் கிராம்பு எஸ்டேட் நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டது.
பின்னர் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து நடந்தே சொந்த ஊர் செல்ல முடிவெடுத்த தொழிலாளர்கள் நேற்று காலை புறப்பட்டனர். செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி சாலையில் வந்துகொண்டிருந்தவர்களைப் பார்த்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை செய்தனர்..
இதையடுத்து அவர்கள் சொந்த ஊர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் இவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என சோதனை செய்யப்பட்டு தனியார் வாகனம் மூலம் மீண்டும் காவல் துறையின் மூலமாக தனியார் கிராம்பு எஸ்டேட் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு வந்தத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதை, வருவாய் துறை அலுவலர்களிடம் தொழிலாளர்கள் சொல்லி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: இலவச உணவு பெற 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் - அரவிந்த் கெஜ்ரிவால்