கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு சிக்கன நாணய சங்க உறுப்பினர்களுக்கு 2019-2020ஆம் ஆண்டுக்கான பங்கு ஈவு தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் நேற்று (ஆகஸ்ட் 17) உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மின்சார கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த விஜயகுமார் கூறியதாவது: "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் வாரிய பணியாளர்களால் இயங்கக் கூடிய கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் உறுப்பினர்களுக்கு பங்கு ஈவு தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், 2019-2020ஆம் ஆண்டுக்கான பங்கு ஈவு தொகை கேட்டு பலமுறை கடிதம் கொடுத்தும் இதுவரை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக ஏராளமான போராட்டங்களும் நடத்தப்பட்டு விட்டன.
எனினும் இதுவரை பங்கு ஈவு தொகை வழங்கப்படவில்லை. ஆகவே பங்கு ஈவு தொகையை உடனடியாக வழங்கக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். உடனடியாக அனைவருக்கும் பங்கு ஈவு தொகை வழங்கப்பட வேண்டும். எங்களது கோரிக்கையை ஏற்று பங்கு ஈவு தொகை வழங்காதபட்சத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுரேஷ் ராஜன், ஆஸ்டின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.