கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் விவசாயம் சார்ந்த மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்று. இங்கு நெல், வாழை, தென்னை, ரப்பர் உள்ளிட்டவை முதன்மை விவசாயமாக நடந்து வருகிறது. அதே போன்று காய்கறிகள், கீரைகள், ஊடுபயிர் வகைகள் என ஏராளமான விவசாயங்களும் இங்கு நடைபெற்று வருகின்றன. இரண்டு பருவ மழையை நம்பி விவசாயம் நடைபெற்றாலும், முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசன குளங்களை நம்பியே இங்கு விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மேலசங்கரன்குழி, வெள்ளிச்சந்தை, கணபதிபுரம், வெள்ளிமலை உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் வரும் நுள்ளிவிளை கால்வாய் கடந்த 2021ஆம் ஆண்டு பெய்த பெரும் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அந்த அணையின் உடைப்பை தமிழ்நாடு அரசானது பொதுப்பணித்துறை மூலம் சரி செய்யாத காரணத்தால், அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட்ட போதும் கடைமடை வரையிலும் தண்ணீர் வரவில்லை.
இதனால் விவசாய நிலங்கள் வறண்டு போயின. தென்னை, வாழை உள்ளிட்ட அனைத்து பயிர்களும் தண்ணீர் இன்றி கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது, இதே போன்று இப்பகுதியில் உள்ள பல கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.
பொதுமக்கள் குடிநீருக்காக திண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் அருகே மேலசங்கரன்குழி ஊராட்சி, ராஜாக்கமங்கலம் ஊராட்சி வெள்ளிச்சந்தை ஊராட்சி, கணபதிபுரம் பேரூராட்சி என நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் நெல், வாழை, தென்னை பயிர்கள் கருகி காணப்படுகின்றன.
பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் இந்த ஊராட்சி நிர்வாகங்கள் சார்பிலும், விவசாயிகள் சார்பிலும் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத்தெரிகிறது. இந்த காரணத்தால் அனைத்து விவசாயமும் பாழ்ப்பட்டுள்ளதாக மேலசங்கரன்குழி ஊராட்சி மக்கள் தெரிவித்தனர். மேலும் கால்வாய்களை தூர்வாரி சீரமைத்து கொடுத்தால் மட்டுமே கடை நிலை வரையிலும் விவசாயம் சீராக நடக்கும் என்றும்; மாவட்ட நிர்வாகம், மாநில அரசு உடனடியாக விவசாயிகளை கருத்தில் கொண்டும் விவசாய பாசனத்திற்கு வழிவகை செய்யவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் ஆட்சியர் அலுவலகத்திலும் பொதுப்பணித்துறை அலுவலகத்திலும் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் நான்கு ஊராட்சி மன்ற தலைவர்களுடன் இணைந்து பேயோடு சந்திப்பில் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். நிறைவேற்றப்படுமா விவசாயிகளின் கோரிக்கை? கடன் வாங்கி செய்த விவசாயம் நல்லமுறையில் நடக்கவேண்டும். அதற்கு, உடைந்த கால்வாய்களை சீரமைத்துத்தரவேண்டும் என்கின்றனர், விவசாயிகள்.
இதையும் படிங்க: "திமுக என்றாலே வன்முறை கட்சி தான்" - ஹெச். ராஜா!