கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் ராணித்தோட்டம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி, மதுரை, ராமேஸ்வரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நாகர்கோவிலில் இருந்து வழித்தடம் 564 என்ற எண் கொண்ட பேருந்து நெல்லைக்கு பணகுடி, வள்ளியூர், ஏர்வாடி வழியாக கிராமப்புறங்களை இணைக்கும் விதமாக இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பேருந்தில் மேல சங்கரன் குழியைச் சேர்ந்த ஞான பெர்க் மான்ஸ் ஓட்டுநராக உள்ளார். இவர் கடந்த 10 நாட்களாக இப்பேருந்தில் பிரேக் சரியில்லாமல் இருப்பதாகவும், வலது பக்கம் திருப்பும்போது இடது பக்கமாகவும், இடது பக்கம் திருப்பினால் வலது பக்கமாக வண்டி செல்வதாக நாகர்கோவில் ராணித்தோட்டம் பணிமனையில் உள்ள புகார் புத்தகத்தில் பதிவு செய்து இருந்துள்ளார்.
அதே போன்று, பேருந்தை 60 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கினால் சுத்தமாக பிரேக் பிடிக்க முடியவில்லை. இது விபத்து எற்படுத்தக்கூடும் என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது. ஆனால், “பேருந்தை இயக்க முடிந்தால் இயக்குங்கள் .இல்லை என்றால் பேருந்தை விட்டுச் செல்லுங்கள்” என அதிகாரிகள் கூறியதாக ஓட்டுநர் குற்றம் சாட்டி உள்ளார்.
அதேநேரம், இதே பேருந்தை இயக்கி உள்ளார். இந்த நிலையில், நெல்லை வள்ளியூர் வரை பேருந்தை இயக்கிய அவர், அதற்கு மேல் இயக்க முடியாது எனக்கூறி பயணிகளை கீழே இறக்கி மாற்றுப் பேருந்தில் அனுப்பி உள்ளார். பின்னர், தான் ஓட்டி வந்த பேருந்தை கன்னியாகுமரி மாவட்டம் விசுவாசபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இதனையடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் சென்று, “இந்த பேருந்தில் பிரச்னைகள் உள்ளன. மேலும், இது பற்றி அதிகாரிகளிடம் பல முறை கூறியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பேருந்தின் நிலையை மனுவாக எழுதி போக்குவரத்து அதிகாரியிடம் கொடுத்து விட்டு அரசுப் பேருந்தை ஒப்படைத்துள்ளார்.
மேலும், இது குறித்து ராணித்தோட்டம் பணிமனை அதிகாரியிடம் கேட்டபோது, ”பேருந்து ஓட்டுநர் ஏற்கனவே பல முறை அதிகாரிகளுடன் பிரச்னை செய்து வருபவர். அவருக்கு பணியாற்றுவதற்கு விருப்பம் இல்லாமல் பொய்யான புகாரினை தெரிவித்து வருகிறார். பேருந்தை ஆர்டிஓ அலுவலகத்தில் பிரேக் இன்ஸ்பெக்டர் ஓட்டி பார்த்து, அதில் எந்த பிரச்னையும் இல்லை என்று சான்றிதழ் கொடுத்துள்ளார். ஓட்டுநர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என கூறினர்.
இது குறித்து பேருந்து ஓட்டுநர் கூறும்போது, “ஆளுங்கட்சியின் தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் இப்படி நடந்து கொள்கின்றனர். ராணித்தோட்டம் பணிமனையில் நெல்லை செல்லும் பேருந்துகளில் அதிக வருமானத்தை ஈட்டும் வழித்தடம் இதுதான். ஒரு முறை நெல்லைக்கு சென்று வரும்போது சமார் 18 ஆயிரம் ரூபாய் வரையிலும் கலெக்ஷன் ஆகும். இதனால் என்னை மாற்றிவிட்டு ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களை அமர்த்த இப்படி செய்து வருகின்றனர்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பராமரிக்க முடியாத கோயிலை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும் - பொன் மாணிக்கவேல்