கன்னியாகுமரி: சுனாமி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜேசுராஜன் , குண்டல் பகுதியைச் சேர்ந்த செல்வின் இருவரும் முட்புதருக்குள் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளனர். மேலும் அவர்களுடன் சுனாமி காலனியை சேர்ந்த ஜெனிஸ்(26) வயிற்றில் கத்திக்குத்துடன் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்துள்ளார்.
தகவலறிந்த காவல் துறையினர் அங்கு சென்று உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ஜெனிஸை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதைதொடர்ந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் , கொலையாளிகளை கண்டுபிடிக்க ஆறு தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெனிஸை காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது அவர் நாங்கள் மூன்று பேரும் முருகன் குன்றம் அருகில் காட்டு பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தோம். திடீரென பூட்புதருக்குள் இருந்து வெளியே வந்த இரண்டு பேர் எங்கள் மூவரையும் கத்தியால் சராமரியாக குத்தினர். அவர்கள் யார் என்று எனக்கு அடையாளம் தெரியாது எனக் கூறினார்.
இதனையடுத்து கொலையாளிகள் இருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். ஊரடங்கு என்பதால் பஸ் போக்குவரத்து இயங்கவில்லை. இதனால் கொலையாளிகள் வெளியூர் செல்ல வாய்ப்பில்லை என்ற கோணத்தில் விசாரிக்க தொடங்கினர்.
பின்னர் விசாரணையை துரிதபடுத்திய காவல்துறையினர் ஏழு பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பின் தொடர ஆரம்பித்தனர். இதில் இருவர் அகஸ்தீஸ்வரம் சுற்றுவட்டார காட்டுப்பகுதியில் சுற்றி திரிவாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
ஒருவர் அகஸ்தீஸ்வரம் தெற்கு சாலையேச் சேர்ந்த பாக்கிஸ்வரன் என்றும் மற்றோருவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் அப்பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வந்துள்ளனர். இவர்கள், கொலை செய்யப்பட்ட மூன்று பேருக்கும் மூன்று நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்துள்ளனர்.
அப்போது கஞ்சாவை வாங்கிய ஜேசுராஜன், செல்வின் பணம் கொடுக்காமலும் அவர்களின் இருசக்கர வாகனத்தையும் பறித்து வைத்துக்கொண்டு தகராறு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முத்துகுமார், பாக்கிஸ்வரன் நேற்று முன்தினம் (ஜுன் 24) ஜேசுராஜனும், செல்வினும் முட்புதருக்குள் மது அருந்துவதை அறிந்து கொலை செய்துள்ளனர்.
இந்தக் கொலைக் குற்றம் தொடர்பாக காவல்துறையினர் கைது செய்யப்பட்ட பாகிஸ்வரன், முத்துக்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராஜேஷ் என்பவரையும் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜூன் 28 முதல் விரைவுப் பேருந்துகள் இயக்கம்