குமரி மாவட்டம் பறக்கை பகுதியைச் சேர்ந்தவர் சிவராம பெருமாள். மருத்துவரான இவருக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பாஸ்கரன் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு தனது இறப்புக்குக் காரணம் டிஎஸ்பி பாஸ்கரன் தான் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார்.
மேலும் இதுதொடர்பாக ஆடியோ பதிவு ஒன்றும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து காவல் கூடுதல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) விஸ்வேஷ் சாஸ்திரி தலைமையிலான காவல் துறையினரை நியமித்து மாவட்ட கண்காணிப்பாளர் (எஸ்பி) பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக டிஎஸ்பி பாஸ்கரன், இறந்த மருத்துவர் சிவராம பெருமாள் உறவினர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.
மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுசீந்திரம் காவல் நிலையத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் குமரி டிஎஸ்பி பாஸ்கரன் மீது குமரி மாவட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தினால் இதற்கு உண்மையான தீர்வு கிடைக்காது என்றும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவந்தது.
இது குறித்து எஸ்.பி. பத்ரிநாராயணன் சமீபத்தில் கூறுகையில், “இரண்டு நாள்களில் இந்த வழக்குத் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும்” என்று கூறினார்.
இந்நிலையில் சிவராம பெருமாள் தற்கொலை தொடர்பான வழக்கு சுசீந்திரம் காவல் நிலையத்தில் இருந்து மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றம்செய்து எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களும் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினரிடம் சுசீந்திரம் காவல் துறையினர் இன்று (அக். 30) மாலைக்குள் ஒப்படைக்கவுள்ளனர்.