கன்னியாகுமரி: வேளாண்மை மற்றும் வேளாண் சார்பு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செண்பகராமன்புதூரில் கட்டப்பட்டுள்ள தென்னை மதிப்புக் கூட்டுதல் மையத்தில் இயந்திரங்கள் நிறுவும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து ஊரக்கோணத்தில் அமைந்துள்ள நறுமண வணிக வளாகத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்ததோடு அங்கு தயார் செய்யப்படும் கிராம்பு மொக்கு எண்ணெய், கிராம்பு இலை எண்ணெய், கிராம்பு குச்சி எண்ணெய், சர்வ சுகந்தி இலை எண்ணெய், இஞ்சி இலை எண்ணெய் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.
பின்னர் கிராம்பு எண்ணெய் கூடுதலாக உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மலைத்தோட்ட விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து குலசேகரம் ரப்பர் உற்பத்தி நிறுவனத்தில் ரப்பர் ஷீட்டு தயார் செய்யும் இயந்திரம், புகையூட்டும் அறையினை பார்வையிட்டதுடன், ரப்பர் உற்பத்தி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது அதிகளவில் தரமான ரப்பர் ஷீட்டுகள் உற்பத்தி செய்யவும், உற்பத்தியான ரப்பர் ஷீட்டுகளை தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக நேரடியாக விற்பனை செய்து லாபத்தை ஈட்டவும் அறிவுறுத்தினார்.
பின்னர், மணலோடை அரசு ரப்பர் கழகத்தின் நிலப்பரப்பில் தோட்டக்கலைத்துறை மூலம் ஒப்பந்த அடிப்படையில் 11.52 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ள அன்னாசி பழத்தோட்டத்தை ஆய்வு செய்த அவர், அங்குப் பயிரிடப்படும் அன்னாசிப் பழ ரகங்கள், கடைப்பிடிக்கப்படும் தொழில் நுட்பங்கள் குறித்துக் கேட்டறிந்தார்.
அன்னாசிப் பழங்களின் தரம், அதை சந்தைப்படுத்தலில் உள்ள சாத்திய கூறுகள் போன்றவை குறித்துத் தெரிந்துகொண்டு அதிகளவில் வருமானம் பெறும் வகையில் செயல்படுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு வலியுறுத்தினார்.