கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக அதன் தலைவரும், திரைப்பட இயக்குநருமான பி.டி. செல்வகுமார் கடந்த 60 நாள்களாக ஏழை எளிய மக்களுக்கு பல நிவாரணப் பொருள்களை வழங்கி வருகிறார்.
60ஆம் நாளான இன்று பிரபல திரைப்பட நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் 108 ஆண்களுக்கு 10 கிலோ அரிசியும், 108 பெண்களுக்கு ஆடுக்குட்டிகளும் வழங்கினார்.
இதுகுறித்து திரைப்பட இயக்குனர் பி.டி. செல்வகுமார் கூறுகையில், கரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மன தைரியத்தை கொடுக்கும் வகையிலும் நிவாரண பொருள்களை வழங்கி வருகிறோம்.
மேலும் பெண்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், சொந்தமாக வியாபாரம் செய்து வாழ ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு இன்று 108 ஆடுகளை வழங்கியுள்ளோம். இது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.