கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே கள்ளியங்காடு பகுதியில் பிரபலமான சிவன் கோயில் ஒன்று உள்ளது. கள்ளியங்காடு என்றாலே சிவன் கோயில் தான் என அறிந்திருந்த மக்களுக்கு அந்த பகுதியில் குளக்கரையில் புதிதாக ஒரு நாகராஜர் கோயில் உள்ளது எனவும், அந்தக் கோயில் மகத்துவம் வாய்ந்தது என தெரியவந்ததால் ஆச்சரியம் அடைந்த பக்தர்கள் நாகராஜா கோயிலுக்கு படையெடுக்க துவங்கினர்.
அங்கிருக்கும் சாமியார் பூவை தொட்டால் வண்ண கற்கள் ஆகும் எனவும் அவரிடம் எந்த பிரச்சனையை கூறினாலும் அதற்கு உடனடியாக பரிகாரம் செய்து பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாகவும் தகவல் பரவியுள்ளது. மேலும் அவர் ஐஏஎஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆன்மீகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்து எளிமையாகவும் அமைதியாகவும் வாழ்ந்து வருவதாகவும், இந்த கோயிலுக்கு வருபவர்களுக்கு நாக தோஷம் நீங்கும் என்று கூறி பூஜைகள் செய்து வந்துள்ளார்.
இதனால் அங்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. பௌர்ணமி, அமாவாசை, செவ்வாய், வெள்ளி என மாதத்தின் பெரும்பாலான நாட்கள் இங்கு அதிக அளவில் பக்தர்கள் குவிந்து தங்கள் குறைகளை சொல்லி சாமியிடம் தீர்வு கேட்டு வந்துள்ளனர். நாட்கள் செல்ல செல்ல தொடர்ந்து சென்று கொண்டிருந்த பக்தர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், பழைய பக்தர்கள் குறைந்து புதிய பக்தர்கள் வர ஆரம்பித்தார்கள்.
சாமியாரால் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்த முடியவில்லை என உணர்ந்த பக்தர்கள் இங்கு செல்வதை நிறுத்தினாலும் தங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது என்பதை வெளியே சொல்லாமல் விட்டு விட்டனர். இதனால் பழைய பக்தர்கள் இல்லாமல் புதிய பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. பக்தர்களின் வருகை அதிகரிக்க அதிகரிக்க சாமியாரின் சொகுசு வாழ்க்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது. எளிமையாக துவங்கிய இந்த ஆன்மீக பணிகள் மூலம் இன்று சொகுசு பங்களா, இரண்டு சொகுசு கார்கள் என ஆடம்பர வாழ்க்கையில் சாமியாரும் திளைக்க துவங்கினார்.
பக்தர்கள் பணத்தை மோசடி செய்து சாமியார் சொகுசு வாழ்க்கை வாழ்வதைக் கண்டு ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்ட பக்தர்கள் களமிறங்கினர். தங்களைப் போல் இன்னும் அப்பாவி பொதுமக்களை இவர் ஏமாற்றிக் கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது எனவும் அதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் உண்மை கதைகளை அம்பலப்படுத்த முன் வந்தனர்.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பக்தர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில் பூசாரி பாம்புகளுடன் வாழ்வதாகவும், இரவில் பாம்புகள் வாந்தி எடுக்கும் போது மாணிக்க கற்கள் கிடைத்ததாக கூறியதாகவும், அந்த கற்கள் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும் எனவும் மக்களிடம் இந்த கற்களை வாங்க வைத்தார் என அந்த புகாரில் தெரிவித்துள்ளனர்.
மேலும், பூசாரி கொடுத்த மாணிக்க கற்கள் மற்றும் நவரத்தின கற்கள் போலியானது என்றதும் வாங்கி சென்றவர்களுக்கு வெறும் ஏமாற்றுமே மிஞ்சி உள்ளது. எந்த பலனும் ஏற்படவில்லை. அவர்கள் மேலும் பல இன்னல்களுக்கு ஆளாகி தான் உள்ளனர். இது பற்றி பூசாரியிடம் கூறிய போது தன்னிடம் உள்ள படிக லிங்கத்தை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் இன்னல்கள் அகலும் என்று கூறியவுடன் அந்த லிங்கத்தை 75,000 ரூபாய்க்கு மேல் கொடுத்து பல பக்தர்கள் குறிப்பாக பெண் பக்தர்கள் வாங்கி உள்ளனர்.
கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பல்வேறு விதமான கற்களை கொடுத்து ஏமாற்றியுள்ளார். மேலும் காசிக்கு சென்று ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தனக்கு கண்ணாடியால் ஆன லிங்கம் கிடைத்ததாகவும், தான் தூங்கிக் கொண்டிருந்த போது கனவில் கூறியபடி தனக்கு ஏராளமான மாணிக்க கற்கள் கிடைத்ததாகவும், கடந்த ஜென்மத்தில் நாகர் குடும்பத்தில் பிறந்து பின்னர் நாகலோகத்தில் இருந்து பூலோகத்திற்கு வந்துள்ளதாக கூறி பக்தர்களை ஏமாற்றி வருகிறார். அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த புகாரின் மூலம் தான் ஐஏஎஸ் பதவியை விட்டு விட்டு ஆன்மீகத்தில் ஈடுபட்டதாகவும், இன்னும் பல பல பொய்கள் மூலம் வாயால் வடை சுட்டு பல ஆண்டுகள் மக்களை ஏமாற்றி வந்த போலி சாமியாரின் மோசடி அம்பலமாகி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.