கேரளாவின் பத்தனம் திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது சபரிமலை ஐயப்பன் கோயில். கடல் மட்டத்திலிருந்து மூன்றாயிரம் அடி உயரத்தில் உள்ள இந்தக் கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் மாலை அணிவார்கள். 48 நாள்கள் விரதம் இருந்து சாமியே சரணம் ஐயப்பனே சரணம், கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று பாடியபடியே விலங்குகளின் கூட்டம் மிகுந்த மலையில் ஏறி நடைபயணமாக ஐயப்பனை தரிசிக்கின்றனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் செல்லும் ஐயப்பன் கோயிலில் கரோனா பரவலால் தினசரி ஆயிரம் பக்தர்களும், வார இறுதியில் இரண்டாயிரம் பக்தர்களும் சபரிமலைக்கு வரலாம் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
கார்த்திகை மாத குளிரில் காலணி இல்லாமல் வெறும் கால் பயணமாய் வரும் பக்தர்கள் 18 படி ஐயப்பனை கண்டாலே போதும் மோட்சம் தீரும் என்பார்கள். இருமடி சுமந்து உன்னை காண வருகிறேன் ஐயனே எனக்கூறும் பக்தர்கள் கரோனாவால் ஐயப்பனை காண முடியாத நிலையில் தவித்துவருகின்றனர்.
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களில் சிலர், உன்னை கண்டபடியே உயிர் போனாலும் மகிழ்ச்சி ஐயனே என்று நெகிழ்ச்சியடைவதும் உண்டு. ஆனால், இந்தக் கரோனா தொற்றால் ஐயப்பனை பக்தர்கள் நேரில் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தான் ஏற்ற இருமுடியை ஐயப்பனின் பாதத்தில் காணிக்கையாகச் செலுத்தினால்போதும் என்பதே பக்தர்களின் விருப்பமாக உள்ளது.
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் பொட்டல்குளத்தில் குமரியின் சபரிமலை என அழைக்கப்படும் குபேர ஐயப்பன் மலையில் ஐயப்ப சாமி கோயில் அமைந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருப்பதுபோல் மலையின் மேல் ஐயப்பன் அமர்ந்து அருள் தருகிறார். பதினெட்டு படிகள், மஞ்சள் மாதா சன்னிதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.
இக்கோயிலுக்குச் செல்வது காட்டிற்குள் நடந்துசெல்வதுபோல, மலையில் ஆங்காங்கே அமர்ந்து ஓய்வெடுத்துச் செல்லும் வகையிலும் அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பாகும். அதுமட்டுமின்றி பக்தர்கள் அமைதியான முறையில் தியானம் செய்யவும் சுமார் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைகளின் காற்றை சுவாசிக்கும் வகையிலும் ஸ்ரீ குபேர மூலிகை தியான மண்டபம் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது.
கரோனா பரவலால் சபரிமலைக்குச் செல்ல முடியாத தமிழ்நாட்டு பக்தர்கள், பொட்டல் குளம் அய்யன் மலை குபேர ஐயப்ப சாமி குறித்து கேள்விப்பட்டு இங்கு வந்து ஐயப்பனை தரிசித்து தங்கள் இருமுடி கட்டுகளை இறக்க ஆரம்பித்துள்ளனர். சபரிமலை போன்ற உயரம் இல்லாவிட்டாலும், பக்தர்களின் மனக்கணக்கில் ஐயப்பனை பொருத்தி இருமுடி கட்டுகளை சுமந்து இங்கு வந்துசெல்கின்றனர். இந்தக் கோயிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இதையும் படிங்க: குடிச்சிக்கிட்டே கடிச்சிக்கலாமா... சுவையோடு பருகுங்கள் பிஸ்கட் டீ கப்