கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. . இதனால் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அனைத்து அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்துவருகிறது.
கனமழை காரணமாக ஒரே நாளில் பேச்சிப்பாறை அணையில் 5 அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் ஒன்பதரை அடி தண்ணீரும் உயர்ந்துள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை - 9.20 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3531 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
அதேபோல், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் தண்ணீர் அளவு 40.70 அடியாகவுள்ளது. அணைக்கு வினாடிக்கு 3079 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 86.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கோழிப்போர் விளையில் 85 மி.மீ. மழையும், பெருஞ்சாணி அணை பகுதிகளில் 82.4 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்துவரும் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.